சென்னை: சென்னை தியாகராய நகர், திருவான்மியூர்,கொளத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 14) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனையின் முதல் கட்ட தகவலில், சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷுக்கு தொடர்புடைய நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
மேலும், அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாய் சுக்கிரன் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிப்பது, ஸ்டிக்கர் ஒட்டும் போன்ற அரசு ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
அரசு ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகளில் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சோதனையானது பல்வேறு இடங்களுக்கு விரிவடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த சோதனை நாளை வரை நீடிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அரசு ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதனை ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் அமலாக்கத்துறையின் சோதனை முடிவடைந்த பின்பே சோதனைக்கான முழு காரணம், சோதனையில் என்ன மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. கன்னியாகுமரியில் ஏற்பாடுகள் தீவிரம்!