சான் பிரான்சிஸ்கோ/ சென்னை: தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று (செப்.3) அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், ஈட்டன் நிறுவனத்தின் குளோபல் எனர்ஜி தலைவர் மேத்யூ ஹாக்மேன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Another fruitful day in Chicago!
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai. pic.twitter.com/tnZ4yOO8uF
அதேபோல், அஷ்யூரண்ட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், அஷ்யூரண்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் பிஜு நாயர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய்,தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 30 அன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 31 அன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: சிகாகோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!