தஞ்சாவூர்: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேல வஸ்தாசாவடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் டைடல் நியோ ஐடி பார்க் ஒன்று கட்டப்பட்டு வந்தது. தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, எம்பி முரசொலி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "இந்த ஐடி பார்க் மூலம் டெல்டா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல, ஊட்டியில் மலைவாழ் மக்களுக்காக ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த சிறப்பு இந்தியாவிலேயே வேறு எங்கும் கிடையாது" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அனைத்து விவசாயப் பெருமக்களும் தங்களது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு ஐடி பார்க் கொண்டுவரப்படுகிறது. மேலும், டெல்டாவில் விவசாயப் படிப்பு சார்ந்தும் தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்த கல்வியாண்டில் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும். புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. அரசுப் பள்ளி சார்ந்து புதிய திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.