சென்னை: சென்னை, அண்ணா சாலை, தாஜ் கன்னிமாரா நட்சத்திர விடுதியில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகரஜன் தலைமையில் 72 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் 17 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''ஐசிடி நிறுவனம் 2008ல் கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கியது. இந்தியாவில் வளர்ச்சி அடைந்த பத்து மாநிலங்களில் மாணவர்களுக்கு பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக சிறந்த செயல்பாடுகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இன்றைய ஒப்பந்தம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலான ஒப்பந்தமாகும். பெரிய கார்ப்பரேட் நிறுவனம் அதன் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஐசிடி அகாடமி பயிற்சி திட்டம் ஐடிஐ-களுக்கும் பயிற்சி விரிவாக்கம் செய்ய தொழிலாளர் நலத்துறையுடன் ஒப்பந்தம் போடபட்டுள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கபடாமல் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்னை ஐடி துறைக்கு முதல்வர் மாற்றினார். பின்தங்கிய பகுதிகளில் இருப்பவர்கள் குறிப்பாக பெண்களை மையப்படுத்தி இந்த திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடுவோருக்கான பயிற்சிகள் இந்த திட்டம் மூலமாக வழங்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கான திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது. அந்த வகையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் துறைகளான NSDC, ESSC ஆகிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெரும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. 102 ஐடிஐ-களுடன் தனித்தனி ஒப்பந்தம் போட்டு வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப்படுகிறது.
ஏற்கனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1,500 கல்லூரிகள் ஐசிடியுடன் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு வருகின்றன. ஐசிடியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கைெழுத்தானது. இந்த பயிற்சி மூலம் பயிற்சி பெற்ற 60-70 சதவிகிதம் பேருக்கு வேலை கிடைக்கவேண்டும் என்பது இலக்கு.
முதல்வர் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நிறுவனங்களை ஈர்ப்பது தமிழகத்தில் சிரமம் இல்லை. கர்நாடக மாநிலத்தில் ஐடி-யில் மண்ணின் மைந்தர்களுக்கே நிர்வாகம் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியில் நியமனம் வேண்டும் என்கிற அறிவிப்பு வெளியாகியது. இதனால் அங்கு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது'' என அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஃபார்முலா 4 ரேஸ்க்காக ஸ்பான்ஸரை வற்புறுத்தினோமா? - ஈபிஎஸ்க்கு உதயநிதி கேள்வி!