சென்னை : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் விதமாக நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை கிண்டி மடுவின்கரை பகுதியில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஃபெஞ்சல் புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது. கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. ஆனால் தற்போது தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டு இருக்கிறது.
விழுப்புரம், மயிலம் போன்ற பகுதிகளில் அதிகளவு மழை பொழிந்துள்ளது. சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு கூடுதலாக இருந்தாலும் பெரியளவில் பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. புயல் பாதிப்பு இருக்கும் போதே முதலமைச்சர் வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு அறையை கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
துணை முதலமைச்சரும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டறைக்கும், வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வெள்ள நிவாரண பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார். அனைத்து அமைச்சர்களும் அவரவர் துறை சார்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரைவாக எடுத்தார்கள்.
சென்னையில் 24 மணிநேரத்தில் அனைத்து இடங்களிலும் 18 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பொழிந்துள்ளது. கடந்த காலங்களில் 20 சென்டிமீட்டர் மழையால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு எடுத்துள்ள துரித நடவடிக்கையால் விரைவாக சென்னை சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.
Fengal Cyclone - சைதை வண்டிக்கார தெரு மருத்துவ முகாம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது... #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/YkFmX9juUC
— Subramanian.Ma (@Subramanian_ma) December 1, 2024
அக்டோபர் மாதம் சென்னையில் பெரியளவில் மழை பொழியும் என்று சொல்லப்பட்டதால் 1,700 மோட்டார் இயந்திரங்கள் மாநகராட்சி சார்பில் எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டு அதன் மூலம் மழை நீர் அகற்றப்பட்டது. இப்போது பயன்படுத்தப்பட்ட மோட்டார்கள் அனைத்தும் அந்தந்த பகுதியிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதன் பலனாக நேற்று மழை பெய்ய, பெய்ய மோட்டார் மூலமாக அதை படித்து எடுக்கும் பணியும் நடைபெற்றது.
பொதுவாக 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டிருக்கும். ஆனால் சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதையில் மழையால் மூடப்பட்டுள்ள ஒரே சுரங்கப்பாதை மேட்லி சுரங்கப் பாதை மட்டுமே. மழை பெய்து கொண்டிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சரை தெரிவித்திருந்தார்.
தற்போது சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் தமிழகம் முழுவதும் 51,707 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 28,02,552 பேர் பயனடைந்து உள்ளார்கள்.
சென்னைக்கு இன்னமும் நிறைய மழை தேவைப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. மழை வந்தால் தான் எதிர்காலத்தில் குடிநீர் பஞ்சம் இல்லாமல் இருக்கும். எங்கெல்லாம் மழைநீர் தேங்கியதோ, அங்கெல்லாம் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அவை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஃபெஞ்சல் புயல்: சூறாவளி காற்றில் சாலையின் குறுக்கே சரிந்த தென்னை மரம்!
ஒவ்வொரு மழைக்கும் 'வேளச்சேரி வேளச்சேரி' என்று அழைக்கப்படக்கூடிய வகையில் பாதிப்பு ஏற்படும்.
வேளச்சேரியில் செயல்படுத்திய மழைநீர் வடிகால் பணிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் நேற்று இரவே 90% தெருக்களில் மழைநீர் வடிந்துவிட்டது.
தற்போது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தான் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால் முன்பு சென்னை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தான் ஆறு மணி நேரத்தில் தீர்வு கிடைத்திருக்கிறது. வடசென்னைக்கும் அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இயற்கை பேரிடர்கள் பெரிய அளவில் வரும்போது சின்ன சின்ன பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அந்த பாதிப்புகளும் இல்லாத நிலைக்கு தான் இந்த அரசு முயன்று கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகள் கூட பேரிடர் பாதிப்புகளுக்கு தப்புவது இல்லை. அதுபோன்ற பேரிடர்கள் வரும் நேரத்தில் தமிழக அரசு எடுக்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக இருக்கிற காரணத்தினால் ஆறு மணிநேரத்தில் மழைநீர் வடிந்து தீர்வு கிடைத்திருக்கிறது" என்று கூறினார்.