சென்னை: கோவையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் போதைப் பொருள் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் 82 நாட்கள் சிறையில் உள்ளதாலும், வழக்கின் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததாலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவரது ஜாமீன் உத்தரவாதத்தை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை.
அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று (அக்.21) நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தரப்பில் முன்பு ஆஜரான வழக்கறிஞர் அதிக கட்டண தொகை கேட்டதால், அவர் மாற்றி விட்டார்.
இதையும் படிங்க: "சங்கீத கலாநிதி விருதை வழங்க தடை விதிக்கக் கூடாது" - ஐகோர்ட்டில் கோரிக்கை!
தற்போது ஜாமீன் உத்தரவாத மனுவில், பழைய வழக்கறிஞர் ஆட்சேபனை இல்லை என்று குறிப்பிட்டால் மட்டுமே ஜாமீன் உத்தரவாதம் ஏற்க முடியும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பழைய வழக்கறிஞர் ஆட்சேபனை இல்லை என்று ஒப்புதல் பெறாமல் ஜாமீன் உத்தரவாதத்தை ஏற்கும்படி கோவை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் உத்தரவாத மனுக்கள் மீது அதன் உண்மைத் தன்மையை மட்டுமே நீதிமன்றங்கள் பார்க்க வேண்டும். எந்த வழக்கிலும் மனுதாரர் தரப்புக்கு ஏற்கனவே ஆஜரான வழக்கறிஞரின் ஒப்புதலை கேட்கக் கூடாது என உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்