சென்னை: சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில், தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர்கள் செந்தமிழ்செல்வி, நிரஞ்சன் விஜயன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “மணி மண்டப வளாகத்தில், அம்பேத்கரின் எழுத்துகள், உரைகளின் தொகுப்பு, புத்தகங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் பிறந்த நாளன்று, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, “மணி மண்டபத்தில் அம்பேத்கர் புத்தகங்களை காட்சிப்படுத்த அனுமதி கோரிய மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை” என வாதிட்டார்.
இதனையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “விழாவில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டெண்ட் அமைக்கப்பட்டு, வரக்கூடியவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வெளியீட்டாளரின் புத்தகங்களை காட்சிப்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்குவதில்லை. அவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில், பல வெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீடுகளை விற்பனை செய்ய, இடம் ஒதுக்கக் கோரும் சூழ்நிலை உருவாகும். மேலும், மனுதாரர்கள் விரும்பினால் மணிமண்டபத்தில் உள்ள நுாலகத்தில், தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்த அனுமதி கோரி, விண்ணப்பிக்கலாம்” எனவும் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “அம்பேத்கர் பிறந்தநாளில், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மணி மண்டபத்துக்கு வருகை தருவார்கள் என்பதால், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுடன், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். புத்தகங்களை காட்சிப்படுத்த தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே, மனுதாரர்கள் கோரும் நிவாரணம் வழங்க முடியாது என்பதால், புத்தகங்களை, நுாலகத்தில் காட்சிப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கலாம். பொதுநலன், நடைமுறைகளை பின்பற்றி, அவற்றை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! - MK STALIN