மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் மயிலாடுதுறை போலீசார் ஆடுதுறை வினோத், திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோயில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். இதில் பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், ஆதீனகர்த்தரின் உதவியாளர் செந்தில், செம்பனார்கொவில் மத்திய ஒன்றியச் செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், திருச்சியைச் சேர்ந்த பிரபாகர் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
முன்னதாக, சிறையில் அடைக்கப்பட்ட அகோரம் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கேட்டு பலமுறை மனுத்தாக்கல் செய்த நிலையில், எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் ஜாமீன் மறுக்கப்பட்டது. அதேநேரம், ஶ்ரீநிவாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டபட்டவர்கள் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் முடிவடைந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் கடந்த மே 28ஆம் தேதி குடியரசு, வினோத், விக்னேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், அகோரம் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திடவும், அதனைத் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை சனிக்கிழமைதோறும் கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: திடீரென மெமு ரயிலாக மாறிய மயிலாடுதுறை - சேலம் ரயில்.. பயணிகள் அதிர்ச்சி!