மதுரை: மதுரை சேர்ந்த வெரோணிக்கா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
ராஜாஜி மருத்துவமனையில் பல அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. மேலும், இதயம், கண், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ மையம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வாகன போக்குவரத்து நிறுத்த வசதி, அறுவை சிகிச்சைகளில் தாமதம், அதிகளவிலான கூட்டம், சிகிச்சை அளிப்பதில் தாமதம், தரம் குறைந்த மருத்துவம், அவசரகால மருந்துகளை கொள்முதல் செய்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிரந்தர முதல்வரை பணியமர்த்துவது மிகவும் அவசியம்.
மதுரையில் மட்டுமின்றி தமிழகத்தில் கரூர், திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதல்வர்கள் நியமிக்கப்படவில்லை. ஆகவே தமிழகத்தில் மதுரை உள்பட காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, " முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன்? என கேள்வி எழுப்பி, வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை, செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பு.. 84 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!