மதுரை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் கணினி ஆபரேட்டர் சுமதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இவ்வாறு தாக்கல் செய்த மனுவில், “நான் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தொகுப்பூதியத்தில் கணினி ஆபரேட்டராக 2014 முதல் பணிபுரிந்து வருகிறேன்.
ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும், பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்பந்தத்தை பணி நீட்டிப்பு செய்து வந்தனர். என்னைப்போல் 27 பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்தோம். ஆனால், நாங்கள் பணிபுரியும் கணினி ஆபரேட்டர் பணியானது, நிரந்தர பணியிடத்திற்கானது.
ஆனால், நிரந்தரப் பணியாக நிரப்பாமல், தற்காலிக பணியாகவேக் கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7 அன்று பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வந்த 27 பணியாளர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்காமல், தொகுப்பு ஊதிய நியமனத்தை ரத்து செய்து உள்ளனர். இது சட்டத்திற்கு எதிரானது, எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாலணைக்கு வந்தது. அப்போது, தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வந்த 27 கணினி ஆபரேட்டர்களையும் பணி நீட்டிப்பு வழங்காமல், தொகுப்பு ஊதிய நியமனத்தை ரத்து செய்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது குறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை பதிவாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: பாயாசத்தில் விஷம் வைத்து சிறுமி கொலை; ஆயுள் தண்டனை வழங்கிய தேனி மாவட்ட நீதிமன்றம்!