சென்னை: விழுப்புரத்தில் திமுக கட்சி சார்பில் கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் போதுமான நடவடிக்கை எடுப்பது இல்லை எனவும், சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் கொடிக்கம்ப அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மாவட்டச் செயலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மக்கள் வரிப்பணத்தை இழப்பீடாக வழங்கிவிட்டு நடவடிக்கை எடுத்ததாக அரசு கூறுகிறது எனவும், கொடிக் கம்பங்கள் வைப்பதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதல் பேனர் கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
கட்சி (திமுக) சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு அரசு மற்றும் கட்சியின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பேனர்கள் வைத்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும்" தெரிவித்தார்.
இதையடுத்து, எந்த அடிப்படையில் அரசியல் கட்சிகள் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது எனவும், நடவடிக்கை எடுக்க சட்டம் இருந்தும் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் மூன்று குற்றவியல் திருத்தச் சட்டங்களுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!