சென்னை: தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள கிரின் பார்க் பள்ளி நிர்வாகம், பங்குதாரர்களிடம் வாங்கிய 12 கோடியே 23 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் வட்டார கல்வி அலுவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு பள்ளியை துவங்கும் போது 100 பேரிடம் சிறு சிறு பங்குத் தொகையாக சுமார் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை நிர்வாகம் வசூலித்தது. இந்நிலையில், பங்குத்தாரர்களுக்கு கடந்த 7 வருடங்களாக முதலீட்டிற்கான லாபம் மற்றும் ஈவுத்தொகையை வழங்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இடைத்தரகர்களாக செயல்பட்ட அலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகியோர் மோசடி செய்ததாக காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 'குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே'.. அமைச்சர் சேகர்பாபுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி..!
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பள்ளித் தலைவர் முனிரத்னம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 கோடி ரூபாய் வைப்பாக நீதிமன்றத்தில் செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
2 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்து முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று பள்ளித் தலைவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பணத்தை இழந்தவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது. 2 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற உத்தரவை இதுவரை நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை. எனவே, முன் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்