திருநெல்வேலி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. கனமழையால், குடியிருப்புப் பகுதியில் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதன் விளைவாக, கடனாநதி, ராமநதி அணைகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது.
கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆழ்வார்குறிச்சி வழியாக நெல்லை மாவட்டம் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் அடியை நெருங்கியது. அதனைத் தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றிலிருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீர்வரத்து குறைவு: இந்த நிலையில், நேற்று காலை முதலே திருநெல்வேலியில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாலும், உபரி நீர் வெளியேற்றம் இல்லாததினாலும் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது என செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், நேற்று சுமார் 60 ஆயிரம் கன அடி வரை தாமிரபரணி ஆற்றின் வெள்ளத்தால் மூழ்கி இருந்த கல் மண்டபங்கள் தற்பொழுது முழுமையாக வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
இன்று (டிச.15) ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 143 அடி முழு கொள்ளளவு உள்ள பாபநாசம் அணையில் தற்பொழுது 97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்பொழுது 3 ஆயிரத்து 983 கன அடியாக உள்ளது. இதேபோல், 156 அடி கொள்ளளவுள்ள சேர்வரலாறு அணையில் தற்போது 135 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 983 கன அடியாக உள்ளது.
மேலும், 118 அடி கொள்ளளவு உள்ள மணிமுத்தாறு அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 596 கன அடியாக உள்ளது. தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டுகளில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளிலிருந்து உபரி நீர் நீர் வெளியேற்றப் படாததினாலும், மழைநீர் வரத்து இல்லாததினாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என செய்தி தொடர்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல அனுமதி: இந்த நிலையில், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி ராமநதி அணையின் கரையில் மண் சரிவு..!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உச்ச நீர்மட்டம் 84 அடி கொண்ட ராமநதி அணை உள்ளது. இதன் மூலம், ராமநதி அணை கடையம் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தொடர் கனமழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போதும் அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், அணையின் கரைப்பகுதி நடுவே பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து, கரையில் தேங்கிய மழைநீரால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.