சென்னை: 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மே 25 ஆம் தேதி ஆறாம் கட்டமும், ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்டமும் என இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் மட்டும் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெறும் தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.
திமுக, அதிமுக என வலுவான இருமுனை போட்டியாக எப்போதும் உள்ள தமிழக தேர்தல் களம், இந்த தேர்தலில், திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டியாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள சௌமியா அன்புமணி கடுமையான போட்டியினை தேர்தல் பிரச்சார களத்தில் கொடுத்திருந்த நிலையில், அவர் கணிசமான வாக்குகளையும் பெற்றுள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய தகவல்களின் மூலம் தெரிகிறது.
இதேபோல் தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான போட்டியினை ஏற்படுத்தி உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்தை எதிர்த்து களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன், இத்தொகுதியில் கடுமையான போட்டியினை தந்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என திமுக தலைமையிலான கூட்டணி நம்பி வரும் வேளையில் தருமபுரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் கடுமையான போட்டியினை பாஜக தலைமையிலான கூட்டணி ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் யார் வெற்றி பெறுவார் என்ற கணிக்க முடியாத சூழலே தற்போது வரை நிலவி வருகிறது.
இதேபோன்று, தேர்தலுக்கு முன் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தனி அணியாக போட்டியிட்டுள்ள அதிமுக, தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்று தாம்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேசமயம், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக தன்னை காட்டிக்கொள்ள பாஜகவும் இத்தேர்தலில் முயற்சித்துள்ளது. எனவே, அதிமுக மற்றும் பாஜக, அவற்றின் கூட்டணிக் கட்சிகள் இத்தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றிப் பெற உள்ளன என்பது குறித்த எதிர்பார்ப்பும், அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளில இரண்டாம் இடம் யாருக்கு என்ற ஆவலும் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.
மேலும் வடமாவட்டமான கள்ளக்குறிச்சியிலும், கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளிலும் அதிமுக - திமுகவு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை மாநிிலமான புதுச்சேரியில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நீயா, நானா? போட்டி நிலவி வருகிறது. இங்கு எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றிப் பெற்றாலும், அந்த வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: தேனியில் இம்முறை வெற்றியை ருசிக்கப் போவது யார்?