ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தில் இருந்து 22 பெண்கள் நெல் நாற்று நடவு பணிக்காக திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்து கொண்டாபுரம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 29) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது, அரக்கோணம் அடுத்த ஆணைப்பாக்கத்தில் இருந்து கோணலம் செல்லும் சாலையில் கன்னியம்மன் கோயில் அருகில் செல்லும்போது சாலையின் வளைவில் டிராக்டரை திருப்பும் போது நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் பயணித்து அனைவரும் கால்வாயில் விழுந்தனர்.
கால்வாய் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும், அதேநேரம் கை கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் 108 ஆம்புலன்ஸில் 18 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மூதூர் அரசு ஆரம்ப சுகாதாரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து காயமடைந்தப் பெண்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், பலத்த காயமடைந்த 4 பெண்களுக்கு தீவிர சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், லேசான காயங்களுடன் உயிர் தப்பிய 14 பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து டிராக்டர் ஓட்டிச் சென்ற டிரைவர் சரவணனிடம் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மூதுரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, வள்ளியம்மாள், முத்தம்மாள், கோடீஸ்வரி, ரேவதி, பூங்கொடி, வசந்தம்மாள், பொன்னியம்மாள், கிரிஜா, சந்திரம்மாள், சித்ரா, இந்திரா உட்பட 18 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: தாசில்தாரை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்பட 17 பேர் விடுதலை.. மதுரை நீதிமன்றம் உத்தரவு!