தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி 24வது வார்டு விசிக மாமன்ற உறுப்பினர் ரூபின்சா. இவரது கணவரும் விசிக பிரமுகருமான அலெக்ஸ் வீட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவுப்படி, ஏதேனும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனையிடச் சென்றனர்.
அப்போது அவரது வீட்டின் கட்டிலில் கையில் கட்டுடன் அவரது மகன் படுத்திருந்தார். மேலும், அந்த கட்டிலுக்கு அடியில் கெயில் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, பால்சாமி மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு ரவுடிகள் தலைமறைவாக பதுங்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அதே கட்டிலுக்கு அடியில் சிறிதும் பெரிதுமான கத்திகள், அரிவாள்கள் என 22 ஆயுதங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே ரவுடி அலெக்ஸ் தப்பியோடி தலைமறைவானார்.
தலைமறைவான அலெக்ஸை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத் உத்தரவின் பேரில், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் மேற்பார்வையில், கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் தடைப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் உழவர் சந்தை அருகே தனிப்படை போலீசார் அலெக்ஸை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருக்குறள், புறநானூறு இடம்பெறாத பட்ஜெட்; 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கும் இடமில்லை! - budget 2024