விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேல் - சிவசங்கரி தம்பதியின் மூன்றரை வயது மகள் லியா லட்சுமி தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். நேற்று (ஜன.3) வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுமி மதியம் 1.45 மணி அளவில் சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி ஆசிரியரிடம் சொல்லிவிட்டு பள்ளி வகுப்பறையின் அருகே உள்ள கழிப்பறைக்கு சென்றதாகவும், அதன் பின்னர் மாயமான சிறுமி அங்குள்ள செப்டிக் டேங்க்கில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், லியாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழக முதல்வர் அறிவித்ததின்படி, ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலை அவருடைய பெற்றோரிடம் வழங்கினார். ஆனால், லியாவின் பெற்றோர் ''காசோலை எங்களுக்கு வேண்டாம், எங்கள் குழந்தை இறப்பு பற்றிய உண்மை நிலை தெரிய வேண்டும்.. குற்றம் புரிந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி காசோலையை வாங்க மறுத்தனர்.
இதையும் படிங்க: "உள்ளாடை ஏன் நனையவில்லை?" - விழுப்புரம் சிறுமி மரணத்தில் எழுப்பப்படும் கேள்விகள்!
அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறி காசோலையை பெற்றோரிடம் வழங்கி விட்டு சென்றார். அடுத்த நொடியே உறவினர்கள் அதனை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கைது செய்யப்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆசிரியைக்கு சிறை
பின்னர் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகிய இருவருக்கும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து விக்கிரவாண்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஏஞ்சல் மட்டும் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 10 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்ததாக சொல்லப்படும் சிறுமியின் நுரையீரலில் கழிவு நீர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிறுமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.