சென்னை: கோயம்பேடு சந்தை வியாபாரிகள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சி.எம்.டி.ஏ மாநகராட்சி அலுவலர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களை முற்றுகையிட்ட வியாபாரிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டை முன்வைத்த வியாபாரிகள், "சுமை தூக்கும் தொழிலாளி கீழே விழுந்து அவருக்கு காலில் அடிபட்டது. சில்லறை வியாபாரத்தில் காய்கறி விற்கும் ஒரு பெண்மணிக்கு இருசக்கர வாகனம் மோதி கை முறிவு ஏற்பட்டுள்ளது.”
முறையான பராமரிப்பு வேண்டும்
“இது போன்ற விபத்து இன்று மட்டும் நடக்கவில்லை; தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. சி.எம்.டி.ஏ நிர்வாகம் சரியான ஊழியர்களை நியமித்து முறையான பராமரிப்புகளை செய்யாததால் மட்டுமே, இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன.”
“மார்க்கெட் முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாததால் தண்ணீர் தேங்கி கழிவு நீராக மாறி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குப்பைகளை முறையாக அள்ளிச் செல்லாததால், சுகாதார சீர்கேடும் உருவாகியுள்ளது,” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய வியாபாரிகள், “சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் (சி.எம்.டி.ஏ) சரியான நிர்வாகத்தை மேற்கொள்ளாததால் சந்தை முழுவதும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முன்பு பேருந்து நிலையம் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று வைத்துக்கொண்டால் கூட, தற்போது பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்ட பிறகும், அதே நிலை தொடர்ந்து வருகிறது.” என்றனர்.
சி.எம்.டி.ஏ-வின் அலட்சியப் போக்கு
மேலும், “சி.எம்.டி.ஏ சார்பில் சந்தையின் உள்ளே சரக்குகளை எடுத்துச் செல்பவர்களுக்கு, மீன்பாடி வண்டி மற்றும் கட்டைக் கைவண்டிகள் கொடுத்துள்ளனர். ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. ஒரு பக்க வாயிலில் வந்தால், மறுபக்க வாயில் வழியாக வெளியே செல்ல வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை.”
இதையும் படிங்க |
“இதனால் சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கும், காய்கறிகள் வாங்க வரக்கூடிய சிறு வியாபாரிகள் மற்றும் மக்களுக்கும் நேர விரயம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகள் அனைத்தையும் முன்னிறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தோம். அப்போது எங்களிடம் சிஎம்டிஏ நிர்வாகத்தினர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களிடம் எங்கள் கோரிக்கை அனைத்தையும் முன்வைத்துள்ளோம்.” என்றனர்.
வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும்
கூடுதலாக, தினந்தோறும் 700 மினி வேன்கள், 600 கனரக வாகனங்கள் சந்தைக்குள் சரக்குகளை இறக்குவதற்காக வருகின்றன. அதுமட்டுமின்றி, சரக்குகளை ஏற்றி செல்வதற்காக 2,000 வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தையும் சந்தைக்கு வெளியே நிற்க வைத்து சரக்குகளை ஏற்றினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்றனர்.
மேலும், இப்படி செய்வதால், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் காய்கறிகளை உரிய நேரத்தில் சந்தைக்குள் கொண்டு வந்து, உரிய நேரத்தில் அதனை விற்பனை செய்ய முடியும் என்ற கோரிக்கையை முதன்மையாக முன் வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.