சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களுக்கு தேவையான ஆட்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒரு தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக கடந்த 2020ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். பின்னர், ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், தமிழக அரசு கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபுவை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க முடிவு செய்து அதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 62 வயது வரை பணிபுரியலாம் அல்லது ஐந்து ஆண்டுகள் நியமிக்கப்பட்டதில் இருந்து பணியில் இருக்கலாம் என்ற விதியை சுட்டிக்காட்டியும், சைலேந்திரபாபு குறைந்த நாட்கள் மட்டுமே இருக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை சுட்டிக்காட்டி அவரின் நியமனத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் நியமிக்கப்படாமல் காலியாக இருந்து வந்தது. பின்னர், இந்த பதவிக்கு உடனடியாக தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலாளராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் விஷமப் பிரச்சாரம் என்பது கண்டனத்திற்குரியது" - ஓபிஎஸ் தாக்கு! - OPS about mullai periyar dam