ETV Bharat / state

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி; தமிழ்நாடு அணி அபார வெற்றி - எதில் தெரியுமா? - கேலோ

Khelo India: 6வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவை பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.

கேலோ இந்தியா
கேலோ இந்தியா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 7:28 PM IST

கோவை: 6வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில், இன்று (ஜன.21) கேலோ இந்தியா போட்டிகள் துவங்கியது.

இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகர், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதேபோல், உத்தரப் பிரதேசம் மற்றும் மிசோரம் அணிகள் மோதியதில், உத்தரப் பிரதேசம் அணி வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு கூடைப்பந்து போட்டியில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் அணிதல் மோதின. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையிலான போட்டியில், மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.

மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு ஆண்கள் அணி மற்றும் கர்நாடக அணி மோதிய கூடைப்பந்தாட்டப் போட்டியில், தமிழ்நாடு ஆண்கள் அணி 99 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் சண்டிகர் மகளிர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 4 சுற்றுகளையும் கைப்பற்றி, 109 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.

அடுத்தடுத்த ஆட்டங்களாக, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் மகளிர் அணிகளுக்கிடையே கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேச ஆண்கள் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிகளைக் காண பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். இப்போட்டிகளைக் காண எந்தவித கட்டணமுமின்றி பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகிய வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தும், பாஜக முயற்சி நீண்ட காலம் நீடிக்காது" - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.