ஈரோடு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 140 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டாஸ்மார்க் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றிற்கு பதிலாக பனை, தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் 'கள்’ பானங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என குரல் எழுந்து வருகிறது.குறிப்பாக, தமிழகத்தில் மதுவிலக்கிற்கு சாத்தியமில்லை எனவும் இதற்கு 'கள்' தான் தீர்வு என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் 'கள்' நல்லசாமி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், "உலகம் முழுவதும் மதுவிலக்கு தோற்றுப் போய் இருந்தாலும் அரசின் கடமை மதுவிலக்கை நோக்கியே இருக்க வேண்டும், மதுவை நோக்கி இருக்கக் கூடாது. கள் இறக்குவதும் அருந்துவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை.
இந்தியாவில், பீகார் மாநிலத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது சாராயத்திற்கும், மது வகைகளுக்கும், அந்நிய தயாரிப்புகளுக்கும், அயல் நாட்டு மது வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது, ஆனால் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்ட பின்பும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது.
நிவாரணம் தவறான முன்னுதாரணம்: பீகார் அரசாங்கம் நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. இது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் சாவையும், சாராயத்தையும் ஊக்கிவிப்பதாக இருக்கும் எனக் கூறி நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மரக்காணத்தில் 23 பேர் கள்ளச்சாராயம் அருந்தி பலியாகி உள்ளனர்.
தற்போது 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது தவறான முன் உதாரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆட்சியாளர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் இது உணவு பொருள் அல்ல போதைப் பொருள் என்று கூறி வருகின்றனர்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: நாடு முழுவதும் 80 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாமல் காத்துக் கிடக்கின்றனர். கள் இறக்க மின்சாரம் தேவையில்லை சுற்றுச்சூழல் பாதிக்காத ஓரு தொழில். தென்னை மரம் தோப்பு, பனைமரம் தோப்பு என குத்தகைக்கு எடுத்து கள்ளை நீராவாகவோ பதனியாகவோ இறக்கி அதனை மதிப்புக்கு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி பல்வேறு வகையான பொருட்களில் மேலை நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும், தலைநகரங்களுக்கும், நட்சத்திர விடுதிகளுக்கும், பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் வரி செலுத்தும் இடங்களுக்கும் சந்தைப்படுத்தப்பட்டால் பெரிய அளவில் வருமானம் தமிழகத்திற்கு கிடைக்கும்.
இது தமிழகத்திற்கு அன்னிய செலாவணியை நீட்டி தரும் தமிழ்நாடு தலை நிமிரு மாநிலமாக மாறும்.வரும் காலங்களில் பூமிப் பந்து வெப்பமாகி கொண்டு வருகிறது கடுமையான பானங்களான மதுபான வகைகளை காட்டிலும் கள் போன்ற மென்மையான பானங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 8 கோடி பனை மரங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் 5 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் தான் உள்ளது. இதனை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.