சென்னை: மத்திய அரசால் கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானம் அருகே மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
இந்த போராட்டத்தில் பங்குபெற்று பேசிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறியதாவது, இந்த மூன்று சட்டங்களும் அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டங்கள் எனத் தெரிவித்தார். இந்த சட்டத்தினால் பல விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார். தற்போது பெரும்பான்மை பெறாமல் கூட்டணி கட்சிகளை வைத்துதான் பாஜக தனது அரசை நடத்துகிறது. அதனால் இன்னும் வேகமாக மோடி அரசு ஜனநாயகத்தை தாக்கும் எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே இருந்த குற்றவியல் சட்டத்தில் சிறு சிறு தவறுகள் இருந்தாலும், அதில் ஒரு நிலைத்தன்மை இருந்ததாகவும், ஆனால் தற்போது புதிதாக கொண்டு வந்த குற்றவியல் சட்டங்கள் நிலையற்ற தன்மையை கொண்டுவரப் போவதாக தெரிவித்தார். மேலும், பாஜக அரசாங்கம் இந்துத்துவாவை மக்கள் மீது திணிப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்துக் கொள்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் பங்குபெற்று உரையாற்றினார். அவர் கூறுகையில், “இன்று நாம் எதிர்கொள்வது அனைத்தும் ஜனநாயக நெருக்கடி என்றும், இந்த 3 சட்டங்கள் மூலம் யார் மீது வேண்டுமானாலும் எந்த குற்றம் வேண்டுமானாலும் சுமத்தி விடலாம் என தெரிவித்தார். ஜனநாயகத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமையை இந்த மூன்று சட்டங்களும் பறிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “சர்வாதிகாரத்துடன் இந்தி திணிப்பு..” புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து துரைமுருகன் பேச்சு!