தஞ்சாவூர்: கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்குட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர்களுக்கு வருமான வரித்துறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வங்கியின் நிர்வாக இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், இணை பதிவாளர்கள் தயாள விநாயக அமுல்ராஜ், திருவாரூர் சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், வருமான வரித்துறை தலைமை ஆணையர் மதுரை சஞ்சய் ராய் மற்றும் முதன்மை ஆணையர் டி.வசந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகளுக்கு, வருவான வரித்துறை நடைமுறைகள், விதிமுறைகள், சட்டதிட்டங்கள், கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டிவை, அவசியம் மற்றும் பராமரிக்க வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அருந்ததியர் 3% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்க" - ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வருமான வரித்துறை ஆணையர் (மதுரை) டி.வசந்தன் பேசியதாவது, “வருமான வரித்துறை கடந்த 2023-24 நிதியாண்டில் இந்தியா முழுவதும் ரூ.19 லட்சத்து 60 ஆயிரத்து 166 கோடி வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதமாகும். நடப்பு நிதியாண்டிற்கு 2024-25 இந்தியா முழுவதும் ரூ.22 லட்சத்து 7 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 820 கோடி அளவிற்கு வருமானவரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அகில இந்திய அளவில் 6.28 சதவீதமாகும்.
தமிழகத்தில், மதுரை மண்டலத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலையும் இணைத்து 20 மாவட்டங்களில், நடப்பாண்டில் ரூ.3 ஆயிரத்து 944 கோடியை வருமான வரியாக வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அளவில் 2.84 சதவீதமாகும்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்