கன்னியாகுமரி: 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுவதைத் தொடர்ந்து 18-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்திலும், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள், பேச்சிப்பாறை அணை வழியாகப் படகில் வந்து, ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன் பொற்றை உட்பட 10க்கும் மேற்பட்ட மலை வாழ் கிராமங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் வாக்களிப்பதற்காக பேச்சிப்பாறை அரசு உண்டு உறை விட மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க, மலைமேல் உள்ள பகுதியில் இருந்து அணையின் வழியாகப் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அணையில் படகு மூலம் வந்து வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து.
அப்படியாகப் படகு மூலம் வந்த மக்கள், சுமார் 2 கிலோமீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று, ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இதைப் போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக - கேரளா எல்லையில் அமைந்து உள்ள விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகளில் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.
அவர்கள் வாக்களிக்கும் போது வேட்பாளர்களின் பெயரைக் கண்டறிந்து வாக்களிக்கும் விதமாக, இந்த மூன்று தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பெயர் மற்றும் சின்னங்கள் பட்டியல் ஆகியவை தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாள மொழியிலும் ஒட்டப்பட்டு உள்ளது.
இதனால் மலையாள மொழி பேசும் மக்கள் வாக்களிக்க வசதியாக அமைந்து உள்ளது. மலையாள மொழி பேசும் மக்களும் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று வாக்குச்சாவடிகளில் தனியாகப் பாதைகள் அமைக்கப்பட்டு, அங்கு இருக்கும் பணியாளர்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்! - Lok Sabha Election 2024