தென்காசி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதையொட்டி கட்சியின் வேட்பாளர்கள் வீடு வீடாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் அருகே உள்ள திருவேட்டநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி உள்ளனர். மேலும், தங்கள் கிராமத்தில் நீண்ட நாட்களாகவே குடிநீர் பிரச்சினை உள்ளது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இது குறித்து எந்தவித அரசியல் கட்சியினரும் கண்டு கொள்ளவில்லை.
மேலும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, கிராமத்தின் நுழைவுவாயில் மற்றும் வீடுகள் தோறும் கருப்புக் கொடியைக் கட்டி தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்த கிராமத்தில் இதுவரை திமுக உள்ளிட்ட எந்த கட்சியினரும் வாக்கு சேகரிக்கவும் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 200 வாக்குகள் உள்ளன.
எங்களின் குடிநீர் பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் கண்டிப்பாக வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலைப் புறக்கணிப்போம் என இவ்வூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், எங்களின் அடிப்படை ஆதாரமாக விளங்கக்கூடிய தண்ணீர் வசதிக்கான போராட்டம் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. எங்களுடைய போராட்டத்திற்குச் செவி சாய்க்காமல் தற்போது வரை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது.
இதே நிலை மேலும் நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது போல, சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணிப்போம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இன்னொரு புறம் ஒரு சில பகுதிகளில் தங்களின் அடிப்படை வசதிகள் செய்து தராததால் அப்பகுதி பொதுமக்கள் தேர்தலுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தையின் வெற்றிக்காக களமிறங்கிய ஜான் பாண்டியன் மகள்.. வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு! - Lok Sabha Election 2024