மயிலாடுதுறை: விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலைகளுக்காக இடம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. பழைய வீட்டின் கழிவறை தொட்டி அகற்றப்படாமல் புதிய வீட்டின் அருகே அமைந்துள்ளது.
இந்நிலையில் கேசவன் வீட்டின் அருகே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்துள்ளது. இதனையடுத்து பந்தை எடுக்க சென்ற சிறுவர்கள் அங்கு கழிவறை தொட்டியில் மேல் மூடி திறக்கப்பட்டு கிடந்த நிலையில் அதன் உள்ளே மனித எலும்புக்கூடு இருந்துள்ளது. அதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் பாகசாலை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுநீர் தொட்டியில் கிடந்த மனித பெண் எலும்புக்கூடுகளை தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்ட பின் இறப்பின் காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தடவியல் துறையினர், எலும்புக்கூடுகளை ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா? - Safety For Senior Citizens