கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், பூ கரகம் எடுத்தும், கிரேன் வாகனத்தின் இருபகுதிகளில் அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க, ஓசூர் ஸ்ரீ கோட்டை சுயம்பு மாரியம்மன் திருக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாவிளக்கு மற்றும் ஊர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழ்வாண்டு திருவிழா, கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
தொடர்ந்து, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து, காப்பு கட்டி, பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்தனர். இதில், ஒவ்வொரு நாளும் பால்குடம் எடுத்தல், பூ கரகம் எடுத்தல் மற்றும் தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடுகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அலகு குத்தும் திருவிழா, நேற்று (மே 14) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக, கோயில் மூலவர் அம்மனுக்கு, நள்ளிரவு முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அவர்களது உடலில் அலகு குத்திக் கொண்டு, பம்பை, உடுக்கை மற்றும் பறை இசைகளுடன் ஊர்வலமாக கோயிலைச் சென்றடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
இதேபோல, ஏராளமான பக்தர்கள் தங்கள் உடலில் வாய், முதுகு ஆகிய பகுதிகளில் அலகு குத்திக்கொண்டு, ஒரே கிரேன் வாகனத்தின் இருபுறமும் அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு வழிபாடுகள் நடத்தினர்.
இதுமட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த திருவிழாவிற்காக வருகைதரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்காக, சாலை ஓரங்களில் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர்மோர், குளிர்பானங்கள், தர்பூசணி, பழங்கள், அன்னதானம் ஆகியன வழங்கப்பட்டன.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த திருவிழாவையொட்டி, காவல் துறையில் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு, நகரின் பிரதான சாலைகளின் போக்குவரத்தில் மாற்றமும் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு, பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: சென்னையில் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கேத் ஆய்வகம் திறப்பு!