மதுரை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொழிலாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க தயாராக இருப்பதாக பிபிடிசி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.
தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்தலாம் என்றும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள டான் டீ நிர்வாகம் முன் வர வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஆஜரான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, "மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று தானே நேரில் ஆஜராகி, மாஞ்சோலை பகுதியிலேயே அந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வாதிட உள்ளேன்" என தெரிவித்தார்.
முன்னதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், "மாஞ்சோலை தேயிலை தோட்டம் அருகே உள்ள மாஞ்சோலை, காக்கச்சி, நாலுமூக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய 5 கிராமங்களில் உள்ளவர்கள் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (BBTC) நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களை விருப்ப ஓய்வு பெற நிறுவனம் கட்டாயப்படுத்தி அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். எனவே தொழிலாளர்களின் ஓய்வுவை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அரசு 10 ஏக்கர் நிலம் வாங்கி, பிற பண பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.. நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்!