தென்காசி: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மலையோரம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலை நேரம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. தென்காசி, குற்றாலம், குத்துக்கல் வலசை, மேலகரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் வீசி வரும் வெப்ப அலைகளுக்கு இடையே குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென பெய்த மழையினால் சாம்பவர் வடகரை, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.