சென்னை: துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.3.91 கோடி மதிப்புடைய 6.168 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கத்தைக் கடத்தி வந்த குருவி பயணிகள் 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், தங்கத்தை கடத்தியவர்களிடம் நடத்திய விசாரணையில், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுக்காக இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
துபாயிலிருந்து சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள், மிகப்பெரிய அளவில் விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையிலிருந்து ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 6) இரவு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், துபாயிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர், சுற்றுலாப் பயணிகளாக துபாய்க்குச் சென்றுவிட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் உடைமைகளை பரிசோதித்துள்ளனர். அதோடு, அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக உடல் பரிசோதனையும் செய்துள்ளனர். அப்போது அவர்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 6 பெரிய தங்கச் செயின்களை பறிமுதல் செய்துள்ளனர். அதில், 10 பாக்கெட்களில் தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததையும் கைப்பற்றினர். அதோடு, மேலும் அவர்களிடமிருந்து 7 தங்கக் கட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஐந்து கடத்தல் பயணிகளிடம் இருந்தும் மொத்தம் 6 கிலோ, 128 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.3.91 கோடி. இதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் 5 பேரையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதோடு இந்த கடத்தல் தங்கத்தை இவர்கள் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தார்கள்? இவர்களை இந்த கடத்தலுக்காக துபாய்க்கு அனுப்பி வைத்த சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், இவர்கள் ஐந்து பேருமே கூலிக்காக தங்கம் கடத்தும் வேலையில் ஈடுபட்டவர்கள் என்றும், இவர்களை சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல், இதே போல் தங்கம் கடத்தலுக்காக அனுப்பி வைத்தது என்றும், மேலும் இவர்கள் ஐந்து பேருமே, இந்த கடத்தல் தொழிலுக்கு புதியவர்கள் என்றும் தெரியவந்தது. ஆனாலும், சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உரிமை கோரிய நரேந்திர மோடி.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த திரெளபதி முர்மு! - Narendra Modi Sworn