சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடப்பதால் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் இருந்த நிலையில், துணை ஆணையாளர் பவன்குமார் உத்தரவின் பெயரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கஞ்சா விற்பனை செய்பவர்களை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பீர்க்கங்கரணை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான முடிச்சூர், லட்சுமி நகர், மணிவாக்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை குறி வைத்து தகவல்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது, லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் (26) என்பவர்தான் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
உடனே அவரை கைது செய்ய வீட்டுக்குச் சென்று பார்த்த போது வீட்டில் ஆள் இல்லாததால், தீபக்கின் தொலைபேசி எண்ணை காவல் துறையினர் ஆய்வு செய்து பார்த்த போது, ஆந்திராவில் இருப்பது தெரியவந்துள்ளது. பின் உடனடியாக தனிப்படை போலீசார் தீபக்கை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், ஆந்திராவில் இருந்து லட்சுமி நகர் பகுதியில் இருப்பதாக மொபைல் சிக்னல் அலர்ட் கொடுத்ததை தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்ட போது, தீபக், லட்சுமி நகர் அடையாறு ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மதகு அருகில் இருப்பது சிக்னல் காட்டியுள்ளது.
பின் அந்த இடத்திற்குச் சென்ற தனிபடை காவல்துறையினர், தீபக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கஞ்சாவை பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்ததை கண்டுள்ளனர். அப்போது போலீசாரைப் பார்த்தவுடன் கஞ்சாவை போட்டுவிட்டு மதகு மேல் ஏறி தப்பிக்க முயற்சி செய்தபோது சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் தீபக் மற்றும் அவரது கூட்டாளியான மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (25) இருவருக்கும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர்களை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்
மாவு கட்டு போட்டதை தொடர்ந்து பீர்க்கங்கரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில், “கடந்த ஐந்து வருடங்களாக தீபக் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ஆந்திராவிற்குச் சென்று அங்கு மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, தாம்பரம், வண்டலூர், மணிவாக்கம், முடிச்சூர், மணிமங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அந்த கஞ்சா விற்பனை செய்யும் பணத்தில் தீபக் அவரது கூட்டாளிகளை கூட்டிக்கொண்டு ரிசார்ட்டுக்குச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, கடந்த ஜூன் 23ஆம் தேதி வரதராஜபுரம் பகுதியில் சூரியகாந்தி என்ற கஞ்சா வியாபாரியிடம், தீபக்கின் நண்பரான விக்னேஷ் என்பவருக்கும் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியின் போது சூரியகாந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து விக்னேஷை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்நிலையில், விக்னேஷின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சூரியகாந்தி, குமார், ஆமேஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், உயிர் நண்பனான விக்னேஷ் கொலை செய்யப்பட்டு இறந்ததால் ஆத்திரத்தில் கஞ்சா போதை தலைக்கேறி, தீபக் உட்பட 20க்கும் மேற்பட்டோர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, சாலையில் நின்று கொண்டிருந்த அதிமுக பிரமுகரான சம்பத்குமாரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
அப்போது உயிருக்கு பயந்து வீட்டுக்குள் சென்றதால், வீட்டின் ஜன்னல், கண்ணாடி, கார், இருசக்கர வாகனம் ஆகியவை பட்டாக் கத்தியால் அடித்து நொறுக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். அதிமுக பிரமுகர் சம்பத் என்பவர் மணிமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதால் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு காவலர்களை 24 மணி நேரமும் சம்பத் வீட்டில் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.
மேலும், இந்த செயலில் ஈடுபட்ட முக்கிய நபர் தீபக் தான் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, மணிமங்கலம் போலீசார் தீபக்கை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதேபோல், கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட சந்துரு என்பவர் ஐந்து நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததுள்ளது.
ஏற்கனவே கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட போட்டியில், கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறிய நிலையில், மீண்டும் தீபக் கூட்டாளிகள் ஆந்திராவிற்குச் சென்று கஞ்சா வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட முயன்றபோது, தனிப்படை காவல் துறையினர் தீபக் மற்றும் சந்துருவை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 650 கிராம் கஞ்சா ரூ.65 லட்சம்?.. சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!