சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.. அவரது அமெரிக்க பயணத்தில் இதுவரை, மொத்தம் 7,616 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை உறுதி செய்வது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இதனிடையே, தமது இந்த அமெரிக்க பயணத்தின் முக்கியமான ஓர் நிகழ்வாக, உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் உடனான, தமிழகத்தின் 30 ஆண்டுக்கால உறவைப் புதுப்பிப்பது தொடர்பாகவும், மீண்டும் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்தும் அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (செப்.11) ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் தமது உற்பத்தி தொழில்சாலையை இயக்கவுள்ளதாகவும், சென்னையில் ஏற்கெனவே உள்ள தமது ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க அந்நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இன்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவின் தலைவர் கே ஹார்ட் தமது லிங்கிடுஇன் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஃபோர்டு நிறுவனம் சென்னையில் உள்ள தமது தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஆவலாக உள்ளது. இதற்கான விருப்ப கடிதத்தை (Letter of Intent) தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை உள்பட தமிழக அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கே ஹார்ட் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "நிதிப்பகிர்வில் ஏற்றத்தாழ்வு; அவசியம் மாற்றம் தேவை" - 16வது நிதிக்குழு கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
"சென்னையில் தற்போது ஃபோர்டு நிறுவனத்துக்கு மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். மீண்டும் அங்கு எங்களது தொழிற்சாலையை தொடங்குவதன் மூலம், இன்னும் சில ஆண்டுகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை 2,500 முதல் 3,000 வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றும் கே ஹார்ட் தெரிவித்துள்ளார்.
#FORD IS BACK 🌟
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 13, 2024
A year of constant interactions and consistent pitches under the guidance of our @cmotamilnadu Thiru @mkstalin avl have today resulted in the return of #FordMotorCompany to #TamilNadu 🎉
Our CM's efforts to showcase TN's manufacturing prowess, its abundant… https://t.co/lanpPTNSMC pic.twitter.com/naJ0yptbjS
ஃபோர்டு நிறுவன உயரதிகாரியின் இந்த தகவலை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஃபோர்டு நிறுவனத்துடன் கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் பேச்சுவார்த்தைகளின் பயனாக அந்நிறுவனம் சென்னையில் மீண்டும் தமது கார் உற்பத்தியை தொடங்க முடிவு செய்துள்ளது" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை மறைமலை நகரில் இயங்கி வந்த ஃபோர்டு தொழிற்சாலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மூன்றாண்டுகளுக்கு பிறகு தற்போது இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.