திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், நேற்றும், இன்றும் என தொடர்ந்து இருநாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும், தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ராம நதி, கடனா நதியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால், அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 65,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மேலப்பாளைம் கருப்பந்துறை பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. ஆற்றின் கரையோரம் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலையும் வெள்ள நீர் மூழ்கடித்துச் செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாதிப்புகளை பார்வையிட மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து டவுன் மற்றும் முக்கூடல் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார்.
இதையும் படிங்க : நெல்லையில் கொட்டித் தீர்க்கும் மழை: தற்போதைய நிலவரம் என்ன?
பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளநீர் : தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மழைநீரானது குடியிருப்பு பகுதியை சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், சந்திப்பு பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி இருப்பதால், போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சந்திப்பு பேருந்து நிலையமானது மிகவும் தாழ்வான பகுதி என்பதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இப்பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். கடந்த ஆண்டு டிச 17, 18 ஆகிய இரு நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சந்திப்பு பேருந்து நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மழையினால் இடிந்து விழுந்த வீடு : அதேபோல், நேற்றிரவு பெய்த கனமழையால், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்த உலகம்மாள் என்ற (80 வயது) மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்த நிலையில், நூலிழையில் மூதாட்டி உயிர் தப்பினார்.