விருதுநகர்: செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில், இன்று (மே.06) ஏற்பட்ட தீ விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர், படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் சின்ன கருப்பு என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை சட்டவிரோதமாகத் தகர செட் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வெடி மருந்துகளை அரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக, பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சின்ன கருப்பு (44), மகேந்திரன் (26), அன்புராஜ் (27), சதீஷ்குமார் (27), திரு வீரலட்சுமி (28) ஆகிய ஐந்து தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 5 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இந்த வெடி விபத்து குறித்து திருத்தங்கள் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் எனும் கிராமத்தில், கலர் மத்தாப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒரு அறை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. சிவகாசி பகுதியில் இன்று ஒரே நாளில் இரு வேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தால் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.