சென்னை: ராமாபுரம் சாந்தி நகர் சுடுகாடு அருகே போதை மாத்திரை விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, ராமாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தினேஷ் என்ற இளைஞரைப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், தினேஷை சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் ஆஸ்படால் டெபென்ட்டால் 100 எம் ஜி என்ற போதை மாத்திரை வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், ராமாபுரத்தைச் சேர்ந்த வசந்தகுமார், ஹரிகரன், ஜெயராஜ் மற்றும் ஒரு சிறார் ஆகியோர் மொத்தமாக வெளிமாநிலத்திலிருந்து போதை மாத்திரையை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, அவர்களது வீட்டில் சோதனை செய்த போது, சுமார் 2,300 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த விசாரணையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் தெரிந்த நபர்களைக் குறி வைத்து விற்பனை செய்ததும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மாத்திரைகள் வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 5 பேரையும் ராமாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தண்டவாளத்தில் பேரனைக் காப்பாற்றி தன்னுயிரை விட்ட பாட்டி.. தேனியில் நெஞ்சை பிழியும் சம்பவம்! - Theni Train Accident