தமிழ்நாடு: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.19) ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் அடிப்படையில், காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் முதன்முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வருகைதந்து வாக்களித்துள்ளனர். அந்த வகையில், கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கும்பகோணம் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முதன்முறை வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
கோயம்புத்தூர்: கோவை மக்களவைத் தொகுதியில் 2,13,124 வாக்காளர்கள் உள்ளனர். இதில், முதன்முறையாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாக்களித்துள்ளனர். முதல் முறையாகத் தேர்தலில் வாக்களித்த இளைஞர்கள் சிலர் இது குறித்துக் கூறுகையில், "தங்களுடைய ஜனநாயகக் கடைமையைச் செய்து முடிக்க ஆர்வமுடன் காத்திருந்ததாகவும், வாக்களித்த பின்னர் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும்" தெரிவித்தனர்.
மேலும், "இளைஞர்கள் தேர்தலில் முழுமையாக வாக்களிக்க வேண்டும். வாக்கு என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. ஒவ்வொரு ஓட்டும் வெற்றியையும், தோல்வியையும் முடிவு செய்யும். எனவே, அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் தொகுதியில் சத்தியமங்கலம், புன்செய்ப்புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இளம் தலைமுறை புதிய வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்கு செலுத்தினர்.
இது குறித்து, முதன்முதலாக வாக்கு செலுத்திய பெண் வாக்காளர் ஹரிணி என்பவர் கூறுகையில், "நல்ல படித்த வேட்பாளர் என்பது மட்டுமின்றி, நாட்டின் சேவை செய்பவராக இருப்பவரைத் தேர்ந்தெடுக்க அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதற்கிடையில், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ரங்கசமுத்திரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த முதன்முறை வாக்காளர்களை நீலகிரி மக்களவை பாஜக வேட்பாளர் எல்.முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதி முழுவதும் 1810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதிலும், குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர்.
இது குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த தர்ஷினி என்பவர் கூறுகையில், "முதல் முறையாக வாக்களித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பிரதமரை என்னால் தேர்வு செய்ய முடிந்தது என்பதில் மகிழ்ச்சி. அனைவரும் ஓட்டுப் போட வேண்டும்" என்றார்.
இதேபோல, மகாராஜ நகரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் கூறுகையில், "முதல் முறையாக வாக்களித்துள்ளேன் எனது ஓட்டை சரியாகப் போட்டு இருக்கிறேன் என நம்புகிறேன். என்னைப் போன்று முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்கள் ஓட்டை சரியாகப் போட வேண்டும்.
அவர்கள் விரும்பிய நபருக்கு வாக்களிக்க வேண்டும். பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களிக்கக் கூடாது. 100% ஓட்டுப் போட்டால் தான் உண்மையாக நாம் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தெரியவரும்" என்று தெரிவித்தார்.
கும்பகோணம்: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 194ல் நிவேதா மற்றும் ஸ்ரீ வைஷ்ணவி என்ற கல்லூரி மாணவிகள், தங்களது குடும்பத்துடன் வருகைதந்து தங்களது முதல் வாக்கைச் செலுத்தினர்.
இந்த அனுபவம் குறித்து அவர்கள் கூறுகையில், "தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, வாக்குப் பதிவை 100 சதவீதம் எட்ட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள துவரிமான் அரசு உயர்நிலைப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலை 7 மணி முதலே தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அப்போது, முதல் தலைமுறை வாக்காளரும் பொறியியல் பட்டதாரியுமான ஐஸ்வர்ய லட்சுமி என்பவர் கூறுகையில், "ஜனநாயக முறையில் என்னுடைய வாக்கினை மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்துள்ளேன். அதேபோன்று நீங்கள் எல்லோரும் உங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டின் உயரம் குறைந்த பெண்! ஜனநாயக கடமை ஆற்றினார்!