தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த புத்தகத் திருவிழா நாளை மறுநாள் (ஜூலை 29) வரை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு தினமும் அறிவியல் அரங்கம், இலக்கிய அரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிந்தனை நகைச்சுவை அரங்கம் ஆகியவையும் நடைபெற்று வருகிறது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் சிறுகதைகள், இலக்கியம், வரலாறு, அரசியல், ஆன்மீகம், போட்டித் தேர்வுகள், சமையல் குறிப்புகள், பள்ளிப் பாட நூல்கள் என லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பையும், சேமிப்பையும், ஊக்கப்படுத்தும் வகையில் ரூபாய் 1,500க்கு மேல் புத்தகம் வாங்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் சிறப்புப் பரிசும் வழங்க உள்ளார்.
இந்த புத்தகத் திருவிழாவினை எம்பி முரசொலி, எம்எல்ஏ நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும், புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் பள்ளி மாணவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி, கண்ணகி, அவ்வையார், விவசாயி, சாம்ராட் அசோகர், பாரதியார், காமராஜர், முருக கடவுள், திருவள்ளுவர், பாரத மாதா, அப்துல் கலாம் ஆகிய வேடமிட்டு அவர்களது வீர வசனங்களைப் பேசி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இதுகுறித்து பேசிய ஆசிரியர் ஜெயக்குமார், “ஆண்டுதோறும் தஞ்சாவூரில் இந்த புத்தகத் திருவிழா மற்றும் சொற்பொழிவுகள் நடத்துவது வரவேற்கத்தக்கது. அதற்கு முதலில் நான் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆட்சியருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இன்றைய சூழலில் குழந்தைகள் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் செல்போனுக்கு அடிமையாகி வருகின்றனர வேளையில், இதுபோன்று புத்தகத் திருவிழா நடத்துவது மாணவர்களை புத்தகத்தின் மகத்துவத்தை அறியவைக்கும் வாய்ப்பாகும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பேசிய மாணவி ஹாசினி பிரியா ,“ நான் முதல் முறையாக மேடையில் இன்று பேசியுள்ளேன். கண்ணகியின் வேடமும், வசனங்களும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, இன்று எனது வசங்களை நான் தைரியமாக பேசியதில் திருப்தியடைகிறேன்” என்றார். பின் விவசாயி வேடம் அணிந்து வந்த மாணவன், “ நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் மிக முக்கியம், எனது தந்தை கூட விவசாயிதான். நான் மிகுந்த பெருமையடைகிறேன்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மாஞ்சோலை தொழிலாளிகளை விரட்டும் பிபிடிசிக்கு அரசு உதவி செய்கிறது" - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!