கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 19ஆம் தேதி கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. உழைத்தால் தான் அன்றைக்கு சாப்பாடு என்று வாழ்பவர்கள், மதுவிலையை விட சாராய விலை மலிவு என அன்று சாராயம் வாங்கி குடித்துள்ளனர். மெத்தனால் கலந்த அந்த கள்ளச்சாராயத்தை அருந்திய இரண்டு இளைஞர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஆரம்பத்தில் இருவர், ஐவர் என்று இருந்த பலி எண்ணிக்கை நேரம் ஆக ஆக, இரு இலக்கங்களில் உயர்ந்து, ஐம்பதை தாண்டியது. தற்போது வரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் 159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மிகப்பெரும் துயர சம்பவத்தில் தன் மகன் பரமசிவத்தை இழந்து வாடும் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 60 வயதான கொளஞ்சியம்மாள் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "என் மூத்த புள்ள. சாராயம் எங்க குடிச்சிச்சு?, எவ்ளோ குடிச்சிசுன்னு தெர்ல, வூட்டுக்கு வந்து சாப்டல.. சாப்டலன்னு சொல்லிட்டு, 8 மணிக்கு மேல, கால மேல தூக்கின பின்னாடி தான், ஆஸ்பத்திக்கு அவதி அவதியா தூக்கிட்டு போனோம். மூனு நாளா ஐசியூல-ல போட்டிருந்தாங்க.
கண்ணுல காட்டல. புள்ளைக்கு கவனிப்பு இல்ல. எங்களயும் பாக்க விடல. எம் புள்ள என்னைய அனாதையா வுட்டுட்டு செத்து போச்சு. எனக்கு வூடு வாசல், நிலம் கிடையாது. கள்ளச்சாராயம் விக்கிறத தடுங்க சார். குவாட்டர் கடைய தடுங்க சார். இனிமே யாரும் கெட்டு போயிறக்கூடாது. எனக்கு 60 வயதாச்சு. இதுவரை கள்ளசாராயம் குடிச்சி இவ்ளோ பேர் செத்து போனத நான் பாக்கவே இல்ல. ஊர்காரனுங்கோ.. கள்ளச்சாராயத்த குடிச்சுட்டு போத ஏறலனு சொல்லிக்காருங்க.
அதுனால போத வரனும்னு எதையோ கலந்துட்டுடானுங்கோ. குடிச்சிட்டு வந்தவனுங்கோ எல்லாரும் அவுட்டு. பொண்டாட்டி, புள்ள வச்சுருக்கிறவனும் செத்து போய்ட்டான். இல்லாதவனும் செத்துப்போயிட்டான். கள்ளச்சாராயம் விக்கிறத தடுங்க சார். குவாட்டர் கடைய தடுங்க சார். இனிமே யாரு கெட்டு போயிறக்கூடாது” என்று கதறிய கொளஞ்சியம்மாளின் வார்த்தைகளில் மகனை இழந்த அந்த மூதாட்டியின் வேதனை தெரிந்தது.
ஞானப்பிள்ளையின் தம்பி உதயகுமார் கூறுகையில், "திடிதுப்புனு என் அண்ணே இந்த மாரி இறந்துட்டான். தினமும் கள்ளச்சாராயம் வித்துட்டு வர்ராங்க. போலீசுக்கு தெரியாமலா நடக்கும்?. ஒயின் ஷாப், கள்ளச்சாராயக்கடை எல்லாத்தையும் மூடனும்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
இதையும் படிங்க: சினிமா டைரக்டர் ஆகணும்... கள்ளச்சாராயத்தில் தாய், தந்தையை இழந்த சிறுவனின் ஆசை! - Kallakurichi Illicit Liquor Issue