சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சத்திய மூர்த்தி பவனில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி தான் இயற்கை முறைப்படி பிறக்கவில்லை, கடவுள் கொடுத்த வரமாக பிறந்துள்ளேன் என பேசி வருவது மூலம், அவர் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், தரமற்ற நிலக்கரியை தனியாரிடம் கொடுத்து ஆறாயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் லஞ்சம் பெறுகிறது என்று கூறிவந்த பிரதமர் மோடி, தற்போது லஞ்ச மோசடியில் சிக்கி உள்ளார். பைத்தியம் பிடித்தது போல, மன நோயாலியைப் போல் தொடர்ந்து உளறிக் கொண்டு வருகிறார். பிரம்மானந்தா, நித்தியானந்தா போன்ற மோசடி செய்தவர்கள் வரிசையில் பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: “மோடி கடவுளிடமே செட்டிலாகட்டும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!
நான் இஸ்லாமியர் பற்றி எதுவும் பேசவில்லை என்று கூறுகிறார். பெண்களின் தாலி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பிரதமர் மோடி அவர் கட்டிய தாலியை பாதுகாத்துள்ளாரா என்பது கேள்விக்குறிதான். அவர் மாங்கல்யத்திற்கு மரியாதை கொடுக்க மாட்டார் என்பது 50 வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.
இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற மாட்டார் என்பது அவருக்கே உறுதியாக தெரிந்துவிட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்று, மீதமுள்ள இடங்கள் தான் பாஜகவிற்கு கிடைக்கப்போகிறது. எங்களைப் பொறுத்தவரை, எங்களை இழிவுபடுத்தினால் நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்லப்பெருந்தகை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது X வலைத்தள பக்கத்தில், முற்றுகை நடத்துவதற்கு முன்பாக தெரிவித்தால், வரும் பத்து நபர்களுக்கு உணவு அளிக்க தயாராக இருப்பதாக விமர்சித்து கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டபோது, "முற்றுகை இடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவிக்கிறோம். நாங்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். எனவே மீன் வறுவலோடு, பீப் கறியுடன் கூடிய உணவை தயார் செய்து வைத்திருங்கள்" என பதிலளித்தார்.
இதையும் படிங்க: பூரி ஜெகந்நாதர் கோயில் சாவி விவகாரம்; பிரதமர் மீது விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் புகார்!