ஈரோடு: சித்தோடு ஆவின் பால் நிறுவனத்தின் மூலம் ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் முகவர்கள் வாயிலாக பால் பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினசரி சித்தோடு ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து பால், தயிர் பாக்கெட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அந்தந்த பகுதியில் உள்ள முகவர்கள் இருக்கும் இடங்களில் உள்ள பெட்டிகளில் வைத்து விட்டு செல்கின்றனர்.
இதனை முகவர்கள் பொதுமக்களுக்கு அதிகாலையில் விநியோகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம், மாமரத்து பாளையம், எல்லப்பாளையம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் முகவர்கள் வைத்திருக்கும் பெட்டிகளில் இருந்து பால் தயிர் பாக்கெட்டுகள் அடிக்கடி மாயமாவதாக புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை முகவர்கள் பார்வையிட்டனர். இதில் கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஆவின் முகவர் கடையில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு பெண்கள் துப்பட்டாவால் தங்களது முகத்தை மூடியபடி, ஆவின் பால் முகவர்கள் வைத்திருக்கும் பால் பெட்டிகளில் இருந்து பால், தயிர் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மேலும் அதே இரண்டு பெண்கள் மாமரத்து பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வைத்திருந்த பால் பாக்கெட்டுகளையும் திருடிச் செல்வது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனைதொடர்ந்து பால் முகவர்கள் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு ஈரோடு வடக்கு காவல்துறையினர் பால்பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் பெண்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோபிசெட்டிபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு! - wild elephant died in erode