சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மாவு கட்டு போடும் பிரிவில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண் அபுதாபிக்கு பணிக்காகச் சென்ற நிலையில், தற்போது அங்கேயே செட்டில்லாகியுள்ளார். இதனால், ஆகாஷிடம் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆகாஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஆகாஷ் அவரது காதலியிடம் மீண்டும் செல்போனில் பேசியுள்ளார். இதில் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆகாஷ் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு மாவுக்கட்டு போடும் அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். சக ஊழியர்கள் அறையை உடைத்து பார்த்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்த ஆகாஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆகாஷிற்கு கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், தொடர்ச்சியாக ஆகாஷிற்கு மருத்துவமனையில் நைட் ஷிப்ட் கொடுத்து வந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கூலி தொழிலாளியின் மனைவியின் பெயரில் நடந்த ரூ.4.46 கோடி வரிஏய்ப்பு மோசடி.. ஆம்பூரில் நடந்தது என்ன? - Tax Evasion Scam