சென்னை: நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல், ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும், தேர்தலுக்கானப் பணிகளில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களுடைய பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைத் தொடங்கியது முதலே அதிமுகவிற்கு தொடர்ந்து சிக்கல் நிலவிவந்தது. முன்னதாக, இனி பாஜகவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுள் பெரும்பாலான கட்சிகள் தற்போது பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுவருகின்றன. அந்தவகையில், கடந்த வாரம் வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் இருந்த பாமக தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.
மறுபுறம் தேமுதிக உடனான கூட்டணி தொடர் இழுபறியில் உள்ளது. இப்படி தமிழகத்தில் பிரதான கட்சிகளுடன் அதிமுகவின் கூட்டணி இதுவரை உறுதியாகாத நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது, 2024 நாடளுமன்ற தேர்தலில் அதிமுக பெரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து நாளை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை பணிகளை முதல் கட்டமாக இம்மாதம் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மேற்கொள்ளப் போவதாக அதிமுக தரப்பில் அறிவுப்பு வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலத்தில் பிரமாண்ட மாநாடு.. புதிதாக இணையும் கூட்டணி கட்சித் தலைவர்கள்.. பாஜகவின் பலே திட்டம் என்ன?