சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டுமனையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியில் இருந்த கணேசன் மற்றும் அவரது மனைவி பத்மா என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக, கடந்த 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து அமைச்சரை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28ஆம் தேதி எம்.பி, எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, 1 லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும் என்றும், வழக்கை தினந்தோறும் விசாரித்து, ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்த விசாரணையின்போது குற்றம் சட்டப்பட்ட கணேசன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோர் நேரில் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவு படி 1 லட்சம் ருபாய்க்கான பிணைத் தொகைக்கான உத்தரவாதம் மற்றும் இரு நபர் உத்தரவாதம் ஆகியவற்றை தாக்கல் செய்தனர்.
அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதால் விசாரணை தள்ளிவைக்க வேண்டும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம், அவர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்காதது மற்றும் நேரில் ஆஜராகவில்லை என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவை பெற்று வர லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை தரப்பில், அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருப்பதாக கோரி மனுத் தாக்கல் செய்தார். இதனையடுத்து, விசாரணையை ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.