திருச்சி: நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டம், பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு ஆகிய வற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டும் 40 வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்ட மேடையில் பேசிய பிரேமலதா, "அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி இயற்கையான கூட்டணி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியும் நாங்களும் அமைத்துள்ளது கூட்டணி ராசியான வெற்றி கூட்டணி.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் மூவரும் திரை உலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் மூவரும் மக்களால் ஈர்க்கப்பட்டவர்கள். மூவரும் டிசம்பர் மாதத்தில் தான் இறந்தார்கள். மூன்று தலைவர்களும் எந்த தீமையானவற்றையும் கற்றுத் தரவில்லை. ஆனால் மற்ற கட்சியில் இருப்பவர்கள் சட்டம் ஒழுங்கை சீரழித்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்கள்.
2021ஆம் ஆண்டு இந்த கூட்டணி அமைந்திருந்தால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி இருப்பார். 2011ஆம் ஆண்டு, இந்த கூட்டணி தான் சரித்திர வெற்றி பெற்றது. அந்த வெற்றி 2026ஆம் ஆண்டு மீண்டும் கிடைத்து, மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராவார்.
கூட்டணியில் இருக்கிறோம் எனக் கூறியவர்கள், கடைசி நேரத்தில் தங்களுக்கு வேண்டியது கிடைத்த உடன் கூடாரத்தை காலி செய்து விட்டார்கள். ஆனால் தேமுதிக ஒரு வாக்குறுதி அளித்தால் அதில் உறுதியாக இருப்போம். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் தான் துணை நிற்போம். துளசி கூட வாசம் மாறும் தவசி வார்த்தை மாறாது" என்ற விஜயகாந்தின் திரைப்பட வசனத்தை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "1000 ரூபாய் வழங்க முதலமைச்சர் மகளிருக்கு தகுதி பார்க்கிறார். அவர் முதலமைச்சராக இருக்கத் தகுதி இருக்கிறதா என பெண்கள் கேட்கிறார்கள். பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவை விலையை மத்திய அரசு தான் குறைக்க முடியும். ஆனால் நாங்கள் குறைப்போம் என திமுக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு முழு ஆதரவாக அதிமுக தலைமையிலான கூட்டணி இருக்கும். சிஏஏ (CAA) குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர விவகாரத்தில் இந்திய அளவில் பாஜகவும், தமிழகத்தில் திமுக தான் அதிக பணம் பெற்றது தெரியவந்தது. மேலும், 2026ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் திமுகவே இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டி.. வெளியானது பாஜகவின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!