சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதாகவும், இதனால் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுத் தளத்தில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே ட்விட் செய்ததாக கூறியுள்ளார்.
கறைபடிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், ஜாஃபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க உயர் நீதிமன்றமே குழுவை அமைத்துள்ள நிலையில், ஒரு எதிர்க்கட்சியாக அரசின் செயல்படாததன்மையை சுட்டிக்காட்டுவது அவதூறு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆறு மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக ஹெச்.ராஜா மேல்முறையீடு!
திமுக நிர்வாகிகள் சிலர் தொடர்ச்சியாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகத் தான் கூறியதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை எனவும், இதுதொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை உச்சபட்ச அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும்' என பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கை பிப்ரவரி 3ம் தேதிக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.