சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் உள்ள தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரும் 18ஆம் தேதி (சனிக்கிழமை) கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிககனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்பதால் 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்! - TN Rain Today