தருமபுரி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக சார்பில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் இன்று தருமபுரி அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
பின்னர், பிரச்சாரத்தில் தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேசியதாவது, “கரூர் மாவட்டத்திலேயே பின்தங்கிய தொகுதியாக உள்ள அரூர் சட்டமன்றத் தொகுதியை முன்னேற்றமடையச் செய்வது எனது குறிக்கோள். எனவே, இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இப்பகுதியில் முக்கிய பிரச்னையாக உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்து, விவசாயம் செழிப்படைய வழிவகை செய்வேன்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன். மந்திகுளாம்பட்டி, சித்தேரி உள்ளிட்ட கிராம மக்களின் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவேன். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்பகுதியில் மாணவர்களுக்கு கல்லூரி கொண்டு வர வேண்டும்” என்று கூறி வாக்குகளைச் சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பாமக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் களமிறங்கியுள்ள 5 ஓ.பன்னீர்செல்வங்கள்.. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டும், ஈபிஎஸ் விளக்கமும்! - Ramanathapuram OPS Issue