தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி சந்திராபுரம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி மாதன். இவருக்கு சந்திராபுரம் கிராமத்தில் சொந்தமாக விவசாய கிணறு ஒன்று உள்ளது. அந்த விவசாய கிணற்றில் நேற்று (நவம்பர் 11) திடீரென பூனை கத்தும் சத்தம் கேட்டுள்ளது.
அந்த சத்தத்தை கேட்ட அப்பகுதியில் உள்ள ஒருவர் கிணற்றிக்குள் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் ஒரு மூலையில் பூனையும், சிறுத்தையும் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பூனையை பிடிப்பதற்காக துரத்தி சென்ற சிறுத்தைக்கு பயந்து பூனை கிணற்றுக்குள் குதித்ததாக தெரிகிறது. ஆனால் பூனையை விடாமல் சிறுத்தை துரத்தி கிணற்றுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முன் ஜாமீன் கேட்கும் நடிகை கஸ்தூரி.. நாளை விசாரணைக்கு வரும் வழக்கு!
இந்நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வலை வீசி சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்வதற்குள் சிறுத்தை கிணற்றிலிருந்து மேலே ஏறி தப்பி சென்றுள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் ஒலிபெருக்கியில் ’பொதுமக்கள் யாரும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி பாதுகாத்து கொள்க’ என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.