திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் கடந்த சில மாதமாக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து சென்று, முருகனை தரிசிக்க மலை மீது ஏறிச் செல்கின்றனர்.
இந்த நிலையில், பக்தர்கள் கிரிவலப் பாதையில் எளிதாக சென்று வரும் வகையில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன நியூ டெல்டா கியார் மேனுபெக்ச்சர் பிரைவேட் லிமிடெட் கம்பெனி உரிமையாளரும், தீவிர முருக பக்தருமான இளமாறன் மற்றும் ஸ்ரீனிஷா தம்பதியினர் ரூ.30 லட்சம் செலவில் 2 பேருந்துகளை வாங்கி, பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், அந்த பேருந்துகளுக்கு பாத விநாயகர் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேருந்துகளை பெற்றுக் கொண்டார். பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் இந்த பேருந்துகள் இலவசமாக இயக்கப்படவுள்ளது. மேலும், பழனி கோயில் சார்பில் ஏற்கனவே பேட்டரி கார்கள், டீசலில் இயங்கும் மினி பேருந்து, பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் என 16 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பக்தர்கள் வசதிக்காக பக்தர்கள் யாரும் வாகனங்கள் வழங்க விரும்பினால், கோயில் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். தற்போது பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ரூ.30 லட்சம் செலவில் இரண்டு பேருந்துகள் வழங்கிய தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: மேட்டூர் டூ திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை.. சட்டசபையில் அமைச்சர் கொடுத்த பதில்!