நாமக்கல்: இரண்டு நாள் சுற்றுப் பயணமாகத் தமிழகம் வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாமக்கல் நகருக்கு வருகை தந்து, நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து ரோட் ஷோ நடத்தினார்.
இந்த ரோட் ஷோ நாமக்கல் - சேலம் சாலையில் துவங்கி பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. அப்போது, சாலையின் ஓரங்களில் நின்று கொண்டிருந்த பொதுமக்களைக் கண்டு ராஜ்நாத் சிங் கையசைத்தபடியே சென்றார்.
மேலும், நாமக்கல் பேருந்து நிலையம் அருகே திறந்த வாகனத்தில் நின்றபடி வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "உலகத்தில் இந்தியாவின் மதிப்பு இப்போது எப்படி உள்ளது என நீங்களே கூர்ந்து கவனியுங்கள். காங்கிரஸின் 70 ஆண்டுக் கால ஆட்சியில் செய்ய முடியாததை தற்போது பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி 10 வருட ஆட்சியில் சிறப்பாகச் செய்து வருகிறது.
2014ஆம் ஆண்டின் நாட்டின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது எப்படி உள்ளது? 2027ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 3வது இடத்திற்கு வரும். சென்ற முறை 303 இடங்களை நமது தலைமையிலான அரசு கைப்பற்றி ஆட்சி அமைத்தோம். தற்போது 400 இடங்களைப் பிடித்து ஆட்சியமைப்போம்.
திமுக - காங்கிரசும் அவர்களது குடும்பத்திற்காக உழைத்து வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி நாட்டிற்காக உழைத்து வருகிறார். ராமர் கோயிலைக் கட்டி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். தற்போது இந்தியாவில் ராம ராஜ்யம் நடந்து வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
நாம் கூறியது போலக் குடியுரிமை சட்டத்திருத்த அமல்படுத்தியுள்ளோம், இங்கு எந்த மதத்தினரும் வெளியே போகத் தேவையில்லை. எந்த மதத்தினருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிரானது இல்லை. நான் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பேசுகிறேன், நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நமது ராணுவம் மற்ற நாடுகளை விட வலிமையாக உள்ளது.
இந்தியாவில் பாஜக அரசு ஆட்சியமைத்தது பல ஏழை எளிய மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள் காட்டியுள்ளோம், விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். திமுக காங்கிரஸ் கட்சியினர் இந்த நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. 2047ல் இந்தியா சூப்பர் பவர் கொண்ட நாடாக மாறும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் நாளை பிரதமர் மோடியின் வாகன பேரணி பிரச்சாரம்; பாதுகாப்புப் பணிகள் தீவிரம்!